“இறந்த சடலத்துடன் உடலுறவுக்கொள்வது குற்றமல்ல" – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 21 வயது பெண்ணை கொலைசெய்து, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது செஷன்ஸ் நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் வீரப்பா, வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

அப்போது நீதிபதிகள்,”குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த சான்றுகள் மற்றும் இறந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் உட்பட அரசுத் தரப்பு முன்வைத்த சாட்சியங்களின் அடிப்படையில், கொலைக்குற்றம் நிரூபணமாகியிருக்கிறது. ஆனால், சடலத்துடன் உறவுகொள்ளும் நெக்ரோபிலியா (necrophilia) என்ற செயலுக்கு ஐபிசியின் கீழ் தண்டனை விதிக்கப்படுமா என்ற கேள்வியை நீதிமன்றம் ஆய்வு செய்தது. அதில், இறந்த உடலை மனிதனாக அழைக்க முடியாது என்பதால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) கீழ் ஒரு குற்றமாக கருதமுடியாது.

எனவே, குற்றவாளிக்கு கொலைக் குற்றத்துக்கான தண்டனை வழங்கிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்கிறது. இறந்த நபரின் கண்ணியத்திற்கான உரிமையை பாதுகாக்க மத்திய அரசு ஐபிசியின் 377 வது பிரிவின் விதியை திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. இறந்த உடல் அல்லது இறந்த பெண்ணுக்கு எதிரான குற்றமான நெக்ரோபிலியாவுக்கு (necrophilia) ஒரு தனி விதியை அறிமுகப்படுத்த வேண்டும்.

நீதிமன்றம் தீர்ப்பு

இங்கிலாந்து, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் நெக்ரோபிலியா குற்றச் செயலுக்கு சட்டங்கள் உள்ளன. மேலும், ஆறு மாதங்களுக்குள் கர்நாடக பிணவறைகளில் சிசிடிவிகளை நிறுவவும், சுகாதாரம் மற்றும் தனியுரிமையைப் பராமரிக்கவும், மருத்துவப் பதிவுகள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பிணவறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.