கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்டுக – ராமதாஸ் வலியுறுத்தல்

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் பெயரை கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர்

அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் ட்விட்டரில்; இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்திற்கு சொந்தக்காரரும், ஆங்கிலேயர்களை துணிவுடன் எதிர்த்து நின்று போராடியவருமான கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாள் இன்று.

கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை.

வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார்.

அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

‘இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான அஞ்சலையம்மாள் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியப் போதே, அஞ்சலையம்மாளும் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். இவர் நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.