காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை தீ வைத்து எரித்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சுலோச்சனா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் மீனாட்சி (18) மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவர் நடராஜன், மகன் தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது வீட்டில் தனியாக இருந்த சுலோச்சனா, தனது உடலிலும், மகள் மீனாட்சி உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் மகள் மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மனவளர்ச்சி குன்றிய மகளின் நிலைமையால் மனவேதனை அடைந்த சுலோச்சனா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தன் மீதும், மகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.