கிரேட்டர் நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உயர்தர போதை மருந்துகளை தயாரிப்பதற்கான ஆய்வகத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர், கடந்த 2 வாரங்களுக்குள் கிரேட்டர் நொய்டா பகுதியில் கண்டுபிடிக்கப்படும் 2-வது போதை மருந்து ஆய்வகம் இதுவாகும்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பீட்டா-2வில் உள்ள மித்ரா என்கிளேவ் காலனியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டில் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, ரூ.150 கோடி மதிப்புள்ள சுமார் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. போதை மருந்து தயாரிப்பில் ஈடுபட்டதாக இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 17-ம் தேதி தீட்டா-2 பகுதியில் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி மதிப்பிலான மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக, நைஜீரியாவைச் சேர்ந்த 9 பேரும், செனகலைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டாவது முறையாக மற்றொரு ஆய்வகத்தில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன. அங்கிருந்து போதை மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த இரண்டு போதை மருந்து ஆய்வகங்களையும் ஒரே கும்பல் கடந்த ஒரு வருடமாக இயக்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. உ.பி.யில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான போதைப் பொருட்களை அந்த கும்பல் விற்பனை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அதன் விநியோகத் தொடர்புகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நொய்டாவில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 289 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு போதைமருந்து தயாரிப்பில் ஈடுபட்ட 2 ஆய்வகங்களை போலீஸார் கண்டறிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.