சென்னை:
கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால் சொந்த ஊர்களில் இருந்து அலை அலையாக மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 6 மணி தொடங்கி 10 மணி வரை கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இல்லாததால் அரசு உடனடியாக சிறப்பு பஸ்களை கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு உட்பட அனைத்து வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தன. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதனிடையே, முதலில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்ததால் பலரும் மே 30, 31 ஆகிய தேதிகளில் சென்னை திரும்ப உத்தேசித்து இருந்தனர். இந்த சூழலில், வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்கள் பயணத்தை சில நாட்களுக்கு தள்ளி வைத்தனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்:
இந்நிலையில், பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்குவதால் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னை திரும்பி வருகின்றனர். குறிப்பாக, நேற்றும் இன்றும் ஆயிரக்கணக்கானோர் பேருந்துகளில் சென்னை திரும்பினர். இதனால் அதிகாலை முதலே ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பீர்க்கன்கரணை, தாம்பரம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடின.
சிறப்பு பேருந்துகள்:
இந்த சூழலில், வரும் 3 -ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னைக்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ரயில்களில் முன்பதிவுகள் முடிந்துவிட்டதால் அனைவரும் பேருந்துகளை நம்பியே உள்ளனர். ஆனால் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகத்தில் இருக்கும் மொத்த பஸ்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளியூரில் இருந்து சென்னைக்கு பல ஸ்பேர் பஸ்களையும், சிறப்பு பேருந்துகளையும் இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கூடுதல் பேருந்துகள்:
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போதைய சூழலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 2,200 அரசு பஸ்களும், 500 கூடுதல் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், லட்சக்கணக்கான மக்கள் திரும்புவதால் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை போதுமனதாக இல்லை.
எனவேதான், சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளோம். அதுமட்டுமல்லாமல், விழுப்பும், மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட போக்குவரத்து கழகத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகளை பெற்று மக்கள் நெரிசலை சமாளிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
கட்டணக் கொள்ளை:
இதனிடையே, அதிக அளவிலான மக்கள் ஊர் திரும்பும் சூழலை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் மறுபடியும் கட்டணக் கொள்ளையில் இறங்கியுள்ளன. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்புவதற்கு ஏசி ஆம்னி பேருநதுகளில் சாதாரணமாக ரூ.800 வரை வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2000-க்கும் அதிகமாக பல ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை நிர்ணயித்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.