விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி கிராமத்தில் இரும்பு கடை ஒன்றின் மேற்கூரையை உடைத்து பெரும் சிரமப்பட்டு உள்ளே இறங்கிய திருடன் ஒருவன், கல்லாப்பெட்டியில் இருந்த கிழிந்து போன 20 ரூபாயை திருடிச் சென்றுள்ளான்.
விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி கிராமத்தில் இந்தியா ஸ்டீல்ஸ் என்ற இரும்பு கடையை நடத்தி வருகிறார் மும்மூர்த்தி. வழக்கம்போல காலையில் கடையைத் திறந்து பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததோடு, மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, மேற்கூரை ஷீட்டை ஓட்டைப் போட்டு அதன் வழியாக ஒருவர் உள்ளே நுழைய முடியாமல் தத்தளித்து, போராடி நுழைந்துக் கொண்டிருப்பதை கண்டார்.
நேரடியாக கல்லாப்பெட்டிக்குச் சென்று அதனை மெதுவாக திறந்து பார்த்த போது திருடனே அதிர்ச்சியானார். அதில், கிழிந்து போன 20 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்துள்ளது.
உயிரை பணயம் வைத்து வந்ததற்கு இதுதான் கிடைத்ததா என்ற நினைத்தாரோ, என்னவோ, அதனையும் விட வேண்டாமென நினைத்து எடுத்துக் கொண்டார்.
கடையின் மற்ற இடங்களிலும் தேடிப் பார்த்தும் எதுவும் சிக்காததால், அங்கிருந்த பெஞ்சை எடுத்துப் போட்டு அதனை ஏணியாக்கி பத்திரமாக வெளியேறிச் சென்றது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
தகர ஷீட் கொண்டு கடை அமைக்கப்பட்டுள்ளதால் அன்றன்றைக்கு விற்பனையாகும் பணத்தை உரிமையாளர் மும்மூர்த்தி கையோடு எடுத்துச் சென்று விடுவது வழக்கம்.
வழக்கமாக, காலையில் வேலைக்கு வரும் கடை பையனுக்காக 150 ரூபாயை கல்லாப்பெட்டியில் வைத்து விட்டுச் செல்லும் நிலையில், அவன் விடுப்பு தெரிவித்திருந்ததால் அன்றைய தினம் அந்த 150 ரூபாயையும் வைக்காமல் சென்றதாகவும் மும்மூர்த்தி கூறினார்.
கடைசியில், வெண்கல பூட்டை உடைத்து துடைப்பம் திருடிய கதையாகிப் போனது திருடன் எடுத்த ரிஸ்க்.