ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸில்முதல்வராக உள்ள அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜகவிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட் இருக்கிறார். கடந்த 2018ல் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளன.
மாறாக பாஜகவுக்கு 70 எம்எல்ஏக்களும், சுயேச்சைகளாக 13 எம்எல்ஏக்களும், ஆர்எல்பி கட்சியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலா 2 பேரும், ஆர்எல்டி கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளன. இதில் சுயேச்சைகள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவி வருகிறது. முதல்வர் பதவி விவகாரத்தில் முதல் அமைச்சராக உள்ள அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ளது. அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் பல்வேறு புகார்களை முன்வைத்து வருகிறார்.
இன்னும் சில மாதத்தில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மோதல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னவைடை ஏற்படுத்தலாம் என பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு வேளை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் கூட அடுத்த முதல்வர் யார்? என்பதில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்நிலையில் தான் ஸ்மால் பாக்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியை இழக்கும் எனவும், பாஜக ஆட்சியை மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் இந்த கருத்து கணிப்பில் பாஜக மெஜாரிட்டியை தொடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடைபெற உள்ள தேர்தலில் பாஜக 100 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறாக தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி சறுக்கலை சந்திக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 78 முதல் 84 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், மற்றவர்கள் 8 முதல் 10 தொகுதிகளில் வாகை சூடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருத்து கணிப்பின்படி பாஜக 42 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் கட்சி 39 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் 19 சதவீதம் ஓட்டுகளையும் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மால் பாக்ஸ் இந்தியா இதற்கு முன்பும் பல்வேறு தேர்தல் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. குஜராத்தில் பாஜக, டெல்லி மநாகராட்சி தேர்தி்ல ஆம்ஆத்மி, இமாச்சல பிரதேசத்தி்ல காங்கிரஸ், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெறும் என இந்த அமைப்பு கணித்து இருந்தது. அது அப்படியே நடந்த நிலையில் தான் தற்போது ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை ஸ்மால் பாக்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.