சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்காத பேட்டரி கார் – அறுவை சிகிச்சை நோயாளிகள் சிரமம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி காரை இயக்காததால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் நடக்க முடியாத நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்யப்பட்டோர் உள்ளிட்டோரை சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெக்சர் போன்றவை மூலம் மருத்துவ பணியாளர்கள் வார்டுகள், ரத்த பரிசோதனை, ஸ்கேன் மையங்களுக்கு அழைத்து செல்வர். சில சமங்களில் நோயாளிகளை அழைத்து செல்வதில் சிரமம் ஏற்படும்.

இதை தவிர்க்க அதிகளவில் நோயாளிகள் வரும் மருத்துவமனைகளுக்கு பேட்டரி கார் வழங்கப்பட்டன. அதன்படி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 2012-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் பேட்டரி கார் வழங்கப்பட்டது. இந்த பேட்டரி கார் மருத்துவமனை தொடங்கிய முதல் 4 ஆண்டுகள் வரை இயக்கப்படாமல் இருந்தது. புகார் எழுந்ததையடுத்து, பேட்டரி காரை இயக்கி வந்தனர். இந்த காரரில் ஓட்டுநர் உட்பட 8 பேர் அமர முடியும்.

இந்த காரின் நீளம் 6 அடி வரை இருப்பதால், சாய்தளத்தில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. இதையடுத்து பேட்டரி கரை தரைத் தளத்தில் மட்டும் பயன்படுத்தி வந்தனர். தற்போது அங்கும் இயக்காமல் அந்த காரை ஒரு மூலையில் நிறுத்தி வைத்துள்ளனர். நடக்க முடியாத நோயாளிகள் சிரமமடைந்து வரும்நிலையில், பேட்டரி காரை இயக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “பேட்டரி காரை மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக பயன்படுத்தி வருகிறோம். பேட்டரி காரை இயக்கவில்லை என்ற புகார் வரவில்லை” என்று கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.