நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதேபோல் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
சட்டப்படியான கோரிக்கையை ஏற்று இவர்களின் கணக்கை தற்காலிகமாக முடக்கியிருப்பதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. திடீரென சீமான் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை மொழியில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் வைரமுத்து. அவர் பதிவிட்டிருப்பதாவது,
“வன்மையாகக் கண்டிக்கிறேன்
சுட்டுரையை முடக்கிவிட்டால்
சீமான் தீர்ந்து போவாரா?
வெயிலுக்கு எதிராகக்
குடைபிடித்தால்
காணாமற் போகுமோ கதிரவன்?
கருத்தைக்
கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;
கை கால்களைக் கட்டாதீர்கள்
கருத்துரிமை இன்னும்
உயிரோடு இருப்பதாக
நம்புகிறவர்களுள்
நானும் ஒருவன்” என பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும் கருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலினும் சீமானின் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதுதான் அறம், கழுத்தை நெரிப்பது அல்ல என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சீமான் புதிய டிவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
செந்தமிழன் சீமான் என்ற பெயரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார் சீமான். தனது முதல் டிவிட்டாக தனக்கு ஆதரவாய் குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான். சீமான் புதிய கணக்கு தொடங்கியதுமே அவரது ஆதரவாளர்கள் மளமளவென அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.