சென்னை: சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (50), சதீஷ்குமார் (35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம், எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா (45), மோகனா (38), மணிமேகலா (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31) மற்றும் பிருந்தா (28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சேலம், சர்க்கார் கொல்லப்பட்டியில் கந்தசாமி என்பவர் உரிமம் பெற்று பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இன்று கந்தசாமியின் மகன் சதீஷ் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசு குடோனில் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மாலை 4 மணி அளவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில், பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தீயில் கருகி தூர வீசப்பட்டனர். பட்டாசு குடோன் உரிமையாளர் சதீஷ் (35), நடேசன் (50) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உள்பட மூன்று பேர் பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.