சென்னை: “தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலாவுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வியாழக்கிழமை (ஜூன் 1) வரவேற்பு அளிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற வளாக கூட்ட அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசியது: “சென்னை உயர் நீதிமன்றத்தில் 52-வது தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ள நீதிபதி கங்காபுர்வாலா, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார்” என்றார்.
“இரு சார்ட்டர்டு உயர் நீதிமன்றங்களை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது சாதாரணமானதல்ல” என்று தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “சமூக நீதி மாநிலமான தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கு பன்னெடுங்காலமாக நெருங்கிய தொடர்புள்ளது” என்று பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பதவிகளை, சமூக நீதியை பின்பற்றி நிரப்ப வேண்டும் எனவும், மாவட்ட நீதித்துறை காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளும் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.
இதனைத்தொடர்ந்து ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, ‘வணக்கம்’ என தமிழில் கூறி, தனக்கு அளித்த வரவேற்புக்கு ‘நன்றி’ எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “பல சான்றோர்களையும், கலை – கலாச்சார செறிவும் கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது. சென்னை உயர் நீதிமன்றம், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் தந்துள்ளது. தற்போதுள்ள இளையவர்களும் அந்த பெருமையை தொடர்ந்து கொண்டு செல்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் பெறப்படும். யாருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும். தமிழகத்தின் மரபு, கலாச்சாரங்களை பின்பற்றி உங்களை போல வாழ்வேன்” என்று தலைமை நீதிபதி உறுதி அளித்து பேசினார்.