'தி கேரளா ஸ்டோரி' திரையிட்ட தியேட்டர்களை மிரட்டிய தமிழக அரசு : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேரளாவில் உள்ள அப்பாவி இந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தென்னிந்தியாவில் இந்த படம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் நேரடியாக படத்திற்கு தடைவிதித்தது. இதையும் தாண்டி இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 200 கோடியை கடந்து வசூலித்துள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் விபுல் ஷா அளித்த பேட்டியில், தி கேரளா ஸ்டோரி படம் வெளியான தியேட்டர்களை தமிழக அரசு மிரட்டியதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். மீறி படத்தை வெளியிட்டால் திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்படாது என்றும் தாக்குதல் ஏதேனும் நடந்தால் பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் இப்படத்துக்காக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
இந்த இரண்டு மாநில அரசுகளும் தான் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக எப்போதும் குற்றம்சாட்டி வந்துள்ளன. ஆனால் அவர்களே உச்சநீதிமன்ற உத்தரவை நிராகரித்து இப்படத்தை அனுமதிக்க மறுப்பது முரண். இந்த இரண்டு மாநில மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களுடன் நிற்கத் தயாராக இல்லாத அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். உண்மையில் அவை இந்த பயங்கரவாத வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதை மூடி மறைக்க உதவுகின்றன.
இவ்வாறு விபு ஷா கூறியுள்ளார்.