பெங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா படங்கடி பொய்யகுட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் சாலியாத்(வயது 24). இவர் தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை ஆவார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவருக்கும் சிக்கமகளூருவைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சாலியாத் தனது கணவருடன் சிக்கமகளூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாலியாத் இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்துவிட்டது தெரியவந்தது. சாலியாத் கர்நாடக அணிக்காக அலகாபாத்தில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றார். அப்போது கர்நாடக அணி 2-ம் இடத்தை பிடித்தது. மேலும் அவர் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.