லெஜெண்ட் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், தனக்குப் புகையிலை விளம்பர வாய்ப்புகள் வந்தபோதும் அதில் நடிக்கவில்லை என, நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
மகாராஷ்டிர அரசின் ஸ்வச் முக்ஹ் அபியான் (Swachh Mukh Abhiyan) என்ற `வாய் சுகாதார பிரச்சாரம்’ செவ்வாய்க் கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், `ஸ்மைல் அம்பாசடர்’ (Smile Ambassador)’ என்று சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “நான் இந்தியாவிற்காக விளையாடத் தொடங்கியபோது, பள்ளியை விட்டு வெளியேறினேன். புகையிலை தொடர்பான நிறைய விளம்பர வாய்ப்புகள் எனக்கு வர ஆரம்பித்தன. ஆனால் புகையிலை பொருள்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என என் அப்பா என்னிடம் கூறியிருந்தார்.
அதன்பின் எனக்கு இதுபோன்ற பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் என் அப்பாவுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக, நான் எதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை.
என் வாழ்வின் இலக்குகளை அடைய உடற்தகுதி உதவியது. நான் சிறுவயதில் நிறைய விளையாடுவேன், ஆனால் கிரிக்கெட்டின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது.
நான் வளர வளர, என் உடற்தகுதிக்காக ஒழுக்கமாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நான் அதிகம் அறிந்தேன். நாம் தகுதியற்றவராக இருந்தால் நம் இலக்குகளை அடைய முடியாது என்பதை உணர்ந்தேன்.
ஃபிட்டாக இருப்பது இப்போது ஒரு ட்ரெண்டாகிவிட்டது. ஆனால் அது உங்கள் தோற்றத்தைப் பற்றியதாக இருக்கக்கூடாது. ஆரோக்கியம் தொடர்பானதாக இருக்க வேண்டும்.
50 சதவிகித குழந்தைகளுக்கு வாய் தொடர்புடைய நோய்கள் உள்ளன. அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட விஷயம் அவர்களின் நம்பிக்கையைக் கெடுக்கும்’’ என அறிவுரை கூறியுள்ளார்.