தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை தொடர்ந்து, படர்ந்தபுளியிலும் வீ’ட்டில் மீட்டர் பொருத்த வந்துள்ள அதிகாரி எனக்கூறி, அரசின் மின் மீட்டரை கொடுத்து பெண்ணிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது.
எட்டயபுரம் கார்த்திகை தெருவில் உள்ள தனசேகரன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் குணசுந்தரி வீட்டுக்கு டிப்-டாப்பாக உடையணிந்து வந்த நபர் ஒருவர், மின் இணைப்பு கொடுப்பதற்கு, மீட்டர் பொருத்த வந்திருப்பதாக கூறி, 5 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கிவிட்டு ஓடிவிட்டார்.
இதேபோல் படர்ந்தபுளி கிராமத்தில் வசிக்கும் ஆதிலெட்சுமி வீட்டிற்கு மும்முனை மின்சார இணைப்பு கொடுக்கவும், மீட்டர் பொருத்தவும் வந்திருப்பதாக கூறி, 5100 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார்.
ஆதிலெட்சுமி 5500 ரூபாய் வழங்கவே, தன்னிடம் 400 ரூபாய் சில்லரை இல்லை என கூறி, 500 ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டு, அடுத்த முறை வரும் போது தரும்படி கூறியுள்ளார்.
அப்போது ஆதிலெட்சுமியின் சகோதரர் திருப்பதி, தனக்கு தெரிந்த வயர்மேனிடம் மின் இணைப்பு வழங்குவது குறித்து விசாரிக்கவே, நைசாக அந்த நபர் தனது ஸ்கூட்டரில் நழுவி விட்டார்.
ஆதிலெட்சுமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மிண் இணைப்புக்காக விண்ணப்பம் செய்து இருந்தாக கூறப்படுகிறது. இது எப்படி அந்த மர்ம ஆசாமிக்கு தெரிந்தது என்பது பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மின்வாரிய ஊழியர் என்று கூறி போலி ஆசாமி பெண்களை குறி வைத்து அரசின் மின் மீட்டர்களை கொடுத்து பணம் மோசடி செய்து வரும் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.