பெங்களூர்:
பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமல்ல என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. 6 மாதக் கைக்குழந்தையை கூட தனது காம இச்சைக்கு இரையாக்கும் மனித மிருகங்களும் இந்த நாட்டில் இருக்கின்றன. பெண்கள் உயிருடன் இருக்கும் போது தான் இந்த பிரச்சினை என்றால், அவர்கள் இறந்த பிறகும் கூட விடுவதில்லை சில காம வெறியர்கள். பெண் சடலத்துடன் உடலுறவு கொள்ளும் பல பேர் கைது செய்யப்பட்ட சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தான் கர்நாடகா உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு அளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. என்ன நடந்தது? பார்க்கலாம்.
21 வயது இளம்பெண்:
கர்நாடகா மாநிலம் துமாக்கூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன். போதைக்கு அடிமையானவரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு நாள் இரவு வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக 21 வயது நிரம்பிய இளம்பெண் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பெண்ணை பார்த்ததும் ரங்கராஜன் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சடலத்துடன் உடலுறவு:
இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜன் அப்பெண்ணை சரமாரியாக தாக்கி கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, இறந்து போன அப்பெண்ணின் சடலத்தை அங்கிருந்து மறைவான இடத்துக்கு எடுத்துச் சென்ற ரங்கராஜன் அதனுடன் உடலுறவு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
20 ஆண்டுகள் சிறை:
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ரங்கராஜனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தும்கூரு மாவட்ட நீதிமன்றம், பெண்ணை கொலை செய்ததற்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டதற்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இதனிடையே, இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கொலைக்கு தண்டனை ஓகே:
இந்த மனுவானது, நீதிபதிகள் வீரப்பா, வெங்கடேஷ் நாயக் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: குற்றவாளி முதலில் அப்பெண்ணை கொலை செய்துள்ளார். எனவே கொலை குற்றத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை ஏற்கத்தக்கது தான். ஆனால், அப்பெண்ணை கொலை செய்துவிட்டு வெறும் உயிரற்ற சடலத்துடன் தான் அவர் உடலுறவு கொண்டிருக்கிறார்.
பலாத்கார குற்றம் அல்ல:
உயிரற்ற ஒன்றுடன் உடலுறவு கொள்வதை பலாத்காரம் என சொல்ல முடியாது. ஆகவே, இது இந்திய தண்டனைச் சட்டம் 375 மற்றும் 377-இன் கீழ் வராது. எனவே அவருக்கு பலாத்கார குற்றங்களின் கீழ் வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.