மணிப்பூரில் 3-வது நாளாக அமித்ஷா ஆலோசனை: மியான்மர் எல்லையில் ஆய்வு

மோரே,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை எதிர்த்து அங்குள்ள பழங்குடியினர் கடந்த 3-ந் தேதி அமைதி பேரணி நடத்தினர்.

இதில் வெடித்த கலவரம் படிப்படியாக மாநிலம் முழுவதும் பரவியது. சுமார் ஒரு மாதமாக நீடித்து வரும் இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை சுமார் 80 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

அங்கு ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கியமாக, ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 28-ந் தேதி பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டை நடத்தினர்.

இதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பழங்குடி தலைவர்களுடன் சந்திப்பு

வன்முறை மற்றும் கலவர சம்பவங்களால் சீர்குலைந்து கிடக்கும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 29-ந் தேதி மணிப்பூர் சென்றார்.

4 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆய்வு நிகழ்ச்சிகள் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.

இதில் முக்கியமாக, மியான்மரை ஒட்டிய எல்லை நகரான மோரேக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

பின்னர் மோரேயில் குகி பழங்குடியின தலைவர்களை சந்தித்து பேசினார். அத்துடன் பிற பழங்குடியின குழுக்களின் பிரதிநிதிகளும் அவரை சந்தித்து பேசினர்.

அப்போது மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

இந்த தகவல்களை உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

அமைதிக்கு முக்கியத்துவம்

முன்னதாக மெய்தி, குகி குழுக்களின் பிரதிநிதிகளை நேற்று முன்தினம் அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது அவர்களும் அரசின் அமைதி நடவடிக்கைகளுக்கு உதவுவதாக தெரிவித்தனர்.

இதைப்போல மாநில போலீஸ், மத்திய ஆயுதப்படைகள் மற்றும் ராணுவ அதிகாரிகளையும் அமித்ஷா சந்தித்தார். அப்போது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

அத்துடன் வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் அவர்களுக்கு விளக்கினார். மாநிலத்தின் அமைதி மற்றும் வளத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், வன்முறையாளர்களை கடுமையாக கையாளுமாறும் அறிவுறுத்தினார்.

மணிப்பூரில் கலவரம் வெடித்தபின் முதல் முறையாக அமித்ஷா அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி ஏற்படுத்துவதில் உறுதி

இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள காங்போபி முகாமை அமித்ஷா நேற்று மாலையில் பார்வையிட்டார். அங்கும் அவர் குகி பழங்குடியினரை சந்தித்து பேசினார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘காங்போபி நிவாரண முகாம்களை பார்வையிட்டு, குகி சமூகத்தினரை சந்தித்தேன். மணிப்பூரில் மிக விரைவில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதிலும், முகாம்களில் இருப்பவர்கள் வீடு திரும்புவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மணிப்பூரில் உள்ள சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்துக்கு புத்துயிர் ஊட்டுவதில் அரசுடன் தீவிரமாக பங்கேற்க சமூக அமைப்புகள் ஆர்வமாக உள்ளன’ என குறிப்பிட்டு இருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.