இம்பால்: பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இருவேறு இனக் குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள்ள நிலையில் வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மணிப்பூரில் மேய்தி, குக்கி சமூகத்தினரை தவிர, தமிழர்கள், நேபாளர்கள், ராஜஸ்தானியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் உள்ளிட்ட பலர் எல்லை நகரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு, கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இனக்கலவரத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கானோர் எல்லை நகரத்தை விட்டு வெளியேறி மியான்மர் உட்பட பல பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வுகளை மேற்கொண்டார். தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்ட அமித் ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
மணிப்பூரில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட குக்கி, மேய்தி இனக் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்தேன். அத்துடன் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். வன்முறை தொடர்பான 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை சிபிஐ விசாரிக்கும். இந்த விசாரணை நடுநிலையாக இருக்கும். வன்முறையின் பின்னணியை விசாரணை அமைப்பு வேரோடு அலசி ஆராயும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
மேலும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் வழிகாட்டுதலின்படி செயல்படக் கூடிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்.
இன்று (வியாழக்கிழமை) முதல் மாநிலத்தில் ஒருங்கிணைந்த கமாண்ட் செயல்படும். இது மணிப்பூர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பல்வேறு படைப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யும். இதனை ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் குல்தீப் சிங் தலைமையேற்று நடத்துவார்.
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். இதில் ரூ.5 லட்சம் மாநில பங்களிப்பாகவும், ரூ.5 லட்சம் மத்திய பங்களிப்பாகவும் இருக்கும்.
மணிப்பூரில் எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைகள் நிகழாத வண்ணம் உறுதி செய்யும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அமித் ஷா கூறினார்.