இம்பால்: மணிப்பூர் இனவன்முறைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மேலும் மணிப்பூர் வன்முறைகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்திருக்கிறார்.
மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி இனக்குழுவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. கடந்த ஒரு மாதமாக மணிப்பூர் மாநிலம் முழுவதும் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் வன்முறைகளில் இதுவரை மொத்தம் 72 பேர் பலியாகி உள்ளனர்.
மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் முழுமையாக களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர். ராணுவ தளபதி, முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்டோர் மணிப்பூர் விரைந்து சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் முகாமிட்டு நிலைமைகளை ஆய்வு செய்தார். மணிப்பூரில் பல்வேறு இனக்குழுவினரையும் நேரில் சந்தித்தார். மணிப்பூரில் வன்முறையாக் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார் அமித்ஷா.
இதனைத் தொடர்ந்து இன்று இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இம்பாலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கூறியதாவது: மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. வன்முறைகளில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3 நாட்களாக மணிப்பூரில் தொடர்ந்து பல பகுதிகளைப் பார்வையிட்டேன். இம்பால், மோரே, சூரசந்த்பூர் ஆகிய இடங்களில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். மைத்தேயி, குக்கி இனக்குழுவின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.
மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும். பொதுமக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைதி குழு ஒன்று மாநில ஆளுநர் தலைமையில் அமைக்கப்படும்.
மணிப்பூர் வன்முறைகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகள் தலா ரூ5 லட்சம் வழங்கும். மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. மணிப்பூரில் குறிப்பிடத்தக்க 6 வன்முறைகளின் சதி குறித்து சிபிஐ விசாரித்து வருகின்றது. இந்த விசாரணைகள் நேர்மையுடன் நடக்கும் என உறுதி அளிக்கிறோம்.
மணிப்பூர் மாநில மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க 20 மருத்துவர்கள் அடங்கிய 8 குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. இதில் 5 மருத்துவ குழுக்கள் ஏற்கனவே மணிப்பூர் வந்துவிட்டது. எஞ்சிய 3 குழுக்களும் விரைவில் மணிப்பூர் வந்தடையும்.
மணிப்பூரில் கல்விச் சூழல் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலமாக கல்வி கற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
போலியான வதந்திகளை மணிப்பூர் மக்கள் நம்ப வேண்டாம். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவர். அமைதி ஒப்பந்தங்களை மீறி ஆயுதங்களை கையில் எடுத்தவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். நாளை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.