மயிலாடுதுறையில் பிரபல டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது திமுக பிரமுகர் அருகில் உள்ள கடைகளில் விதிகள் பின்பற்றப்படாத நிலையில் இங்கு மட்டும் ஏன் சோதனை செய்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரபல குரு டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் தயாரிப்பதாகவும், செய்தித்தாளில் எண்ணெய் பண்டங்களை வைத்துக் கொடுப்பதாகவும் கூறி நகராட்சி அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டு சீல் வைப்பதாகத் தெரிவித்தனர்.
அப்பொழுது அங்கு வந்த புளியந்தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் அமர்நாத் என்பவர் டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மல்லுக்கட்டினார். இந்த பகுதியில் எத்தனையோ கடைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இந்தக் கடையின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறீர்கள். மாமூல் தராததனால் இப்படி செய்கிறீர்களா.? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.