புதுடெல்லி: ஐபிஎல் 2023 இல் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், தனது வெடிக்கும் பேட்டிங் மற்றும் பினிஷிங் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் துருவ் ஜூரல் தனது முதல் ஐபிஎல் சீசனில் த்னது அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 152 ரன்கள் எடுத்தார். துருவ், 172.73 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார்.
அதோடு, உலகின் சிறந்த ஃபினிஷரும், சிஎஸ்கே (Chennai super kings) கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை களத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, இந்த போட்டி துருவ் ஜூரெலுக்கு ஒரு கனவாக இருந்தது.
ஏப்ரல் 27-ம் தேதி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், துருவ் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார், பின்னர் தோனியால் ரன் அவுட் ஆனார். அப்போது துருவ் ஜூரல், “எம்எஸ் தோனி என்னை ரன் அவுட் செய்தார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இதைச் சொல்லும்போது, நான் மிகவும் பெருமைப்படுவேன். தோனியுடன் களத்தை பகிர்ந்து கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது, நான் கண்ட கனவு, நனவாகிவிட்டது. என் கனவு நாயகர் ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு உத்வேகம் கொடுத்தது“ என்று அவர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த துருவ், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனுடன் பேசுவது தனக்கு ஒரு ‘ரசிகர்’ தருணம் என்று தெரிவித்தார். கேப்டன் தோனியுடன் பேசியது “எனக்கு ஒரு ரசிகர் தருணம். ஒரு கிரிக்கெட் வீரராக நான் எப்போதும் அவரை மிகவும் பாராட்டுகிறேன். இது ஒரு சிறந்த தருணம், ஏனென்றால் கடந்த ஆண்டு நான் அவரை சந்தித்தபோது, அவருடன் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசும் வாய்ப்பு கிடைத்தது, நான் அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால், அவருடன் பேசுவது எனக்கு மன நிறைவு தரும் தருணம்” என்று துருவ் தெரிவித்தார்.
கடினமான இலக்கைத் துரத்துவதற்கான அணுகுமுறை குறித்து, தான் கேப்டர்ன் தோனியிடம் கேட்டதாக ஜூரல் தெரிவித்தார். “பேட்டிங் செய்யும் போது அவரது மனநிலையை அறிய ஆர்வமாக இருந்தேன். கடைசி 12-13 ஓவர்களில் அணிக்கு 100 ரன்கள் தேவைப்படும்போது அவரது அணுகுமுறை குறித்து நான் அவரிடம் கேட்டேன், அந்த சூழ்நிலைகளில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். விஷயங்களை எளிமையாக வைத்துக்கொள்ளவும், தவறுகளுக்கு பயப்படாமல், இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னார். ஆரவாரமாக செயல்படுவதற்கு பதிலாக எளிமை மற்றும் பயனுள்ள வேலையைச் செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தோனியுடனான உடையாடல், மிகவும் பயனுள்ளதாக உரையாடலாக இருந்தது, அவருடைய அறிவுரையை என்றென்றும் மறக்காமல் கடைபிடிப்பேன்” என்று சொன்னார் துருவ்.
ராஜஸ்தானுக்கான தனது ஐபிஎல் அறிமுகத்தைப் பற்றி பேசிய துருவ், ஏப்ரல் 5 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தனது அறிமுகத்திற்கு முன்னதாக தனக்கு எந்தவிதமான நடுக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
“நான் ஒரு தாக்க வீரராக இருந்தேன், எனவே எப்போது வேண்டுமானாலும் அணிக்காக பங்களிக்க தயாராக இருக்கிறேன். எனது வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். இந்த ஆண்டு, நான் மிகவும் கடினமாக உழைத்தேன், ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடுவதை தினமும் பார்த்துக் கொண்டிருந்தேன், அது எனக்கு மிகவும் உதவியது என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கூறுகிறார்.
மேலும் படிக்க | CSK Equalls MI: மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் பட்டம் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே!