தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே நிலவும் முக்கியமான மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று.
காங்கிரஸ்
, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை தாண்டி வேறு சிந்தனைகளுக்கு அம்மாநில மக்கள் இடம் கொடுப்பதே இல்லை. 93க்கு பின்னர் இந்த இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன. இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வாய்ப்பை உருவாக்கி தந்தது பாஜக. இந்த பெருமையை பெற்றவர் வசுந்தரா ராஜே. 2003 – 2008, 2013 – 2018 என இரண்டு முறை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்
இவரது அரசியல் வரவிருக்கும் 2023 சட்டமன்ற தேர்தலில் எப்படி இருக்கப் போகிறது என்பதை விரிவாக அலசுவோம். வசுந்தரா ராஜேவை பொறுத்தவரை மக்களுடன் எளிதாக தன்னை தொடர்புபடுத்தி கொள்ளக் கூடியவர். உணர்ச்சிவசமான பேச்சால் பலதரப்பட்ட மக்களையும் ஈர்ப்பவர். வாக்கு வங்கி அரசியலில் பலமான வியூகங்களுடன் காய் நகர்த்தும் வல்லமை பெற்றவர். செல்வந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அரசியல் திருப்புமுனை என்பது வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் ஏற்பட்டது.
யார் இந்த வசுந்தரா ராஜே?
இவரது அமைச்சரவையில் சிறு, குறு தொழில்களுக்கான மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அங்கிருந்து வசுந்தரா ராஜேவின் அரசியல் என்பது ஏறுமுகமாக தான் சென்றது. 5 முறை எம்.எல்.ஏ, 5 முறை எம்.பி பதவிகளை வகித்துள்ளார். இரண்டு முறை மாநில முதலமைச்சராக இருந்த போது சாலை வசதி, கல்வியில் சீர்திருத்தம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததாக சொல்லப்படுகிறது. தற்போது பாஜக தேசிய துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார்.
பாஜகவில் முக்கியத்துவம்
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக வசுந்தரா ராஜேவிற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவிடம் இருக்கும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் தேசிய தலைமையை முன்னிறுத்துவது. எந்த மாநிலமாக இருந்தாலும், எந்த தேர்தலாக இருந்தாலும், எந்த ஒரு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதாக இருந்தாலும் பிரதமர் மோடியை தான் முன்னிறுத்தி வருகின்றனர். இதனால் மாநில தலைவர்களுக்கு போதிய இடம் கொடுக்கப்படுவதில்லை.
சீனியர்கள் அதிருப்தி
அடுத்தடுத்து புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் போது சீனியர்கள் ஓரங்கட்டப்படும் நிலை உண்டாகிறது. இதனால் மாநில அளவில் கட்சிக்குள் அதிருப்தி அலை ஏற்படுகிறது. இது ஆட்சிக்கும், தேர்தல் அரசியலிலும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளி விடுகிறது. ராஜஸ்தானிலும் அப்படியான சூழல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்தனர். கட்சியின் மாநிலத் தலைவராக சதிஷ் பூனியா நியமிக்கப்படுகிறார்.
வசுந்தராவிற்கு நெருக்கடி
இதையடுத்து வசுந்தரா ராஜே, சதிஷ் பூனியா இடையில் கருத்து மோதல் ஏற்படுத்த தொடங்குகிறது. இதனால் அவர் கட்சி சார்ந்த விஷயங்கள், பொதுக்கூட்டங்கள், திட்டங்களின் தொடக்க விழா உள்ளிட்டவற்றில் தலை காட்டுவதில்லை. வசுந்தராவின் நடவடிக்கைகள் குறித்து மேலிடத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. மேலும் மத்திய அமைச்சரும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் மூலமும் வசுந்தராவிற்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.
பாஜகவிற்கு பின்னடைவு
இதுதவிர மக்களவை சபாநாயகராக இருக்கும் ஓம் பிர்லாவும் வசுந்திராவிற்கு எதிராக காய் நகர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் கட்சியில் வசுந்தரா ராஜேவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் ராஜஸ்தானில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் வசுந்தரா ராஜேவின் இமேஜிற்கு மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கு இருக்கிறது.
ஆன்மீக சுற்றுப்பயணம்
கடந்த 5 ஆண்டுகளில் இவருக்கு இணையாக மாநில பாஜகவில் புதிய தலைவர்கள் யாரும் உருவாகாததை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம். இவரை தவிர்த்து விட்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் பாஜகவிற்கு தோல்வியே மிஞ்சும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தனக்கான இருப்பை உறுதி செய்யும் வகையில் மத வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ச்சியாக செல்லும் திட்டத்தை வசுந்தரா ராஜே தற்போது கையில் எடுத்துள்ளார். இது மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
எதிரணியாக இருக்கும் காங்கிரஸில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்திருக்கும் சூழலில் பாஜகவில் பிளவுகள் இருந்தால் அது நல்லதல்ல. இதை உணர்ந்து வசுந்தரா ராஜேவிற்கு உரிய அங்கீகாரம் அளித்து பாஜக செயல்பட்டால் களம் சாதகமாக மாற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.