வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் கிண்டி சிட்கோ தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், நடப்பு ஆண்டு 2023-24-ல் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பிற்கிணங்க வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சமாகவும், அரசின் மானியம் ரூ.1.25 இலட்சத்திலிருந்து ரு.3.75 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிய தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும். மேலும் உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கான தொழில்களுக்கு பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

மேலும், ஒரு புதிய அறிவிப்பாக அறிவிக்கப்பட்ட, குறு, சிறு மற்றும் நடுத்தர விசைத் தறிகள் தங்கள் உற்பத்தி திறனை மேம்படுத்தி கொள்ள உயர் தொழில்நுட்பம் சார்ந்த நாடா இல்லாத நெய்தலுக்கான கருவிகளை பொருத்த 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விசைத்தறி கூடங்களை நவீனமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாய விளை பொருட்கள் வீணாவதை தவிர்க்கவும், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விளை பொருட்கள், அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் வியாபாரம் இவற்றுக்கு இன்றியமையாத குளிர்பதன கிடங்கு மற்றும் குளிர்சாதன போக்குவரத்து தொழில்களை சிறப்பு தொழில் வகையின் கீழ் சேர்க்கப்பட்டு முதலீட்டு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வரை மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் தென்னை நார் பொருட்கள் தயாரிப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கோவையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (TANCOIR) மற்றும் பொள்ளாச்சி, குண்டடம், உடுமலைபேட்டை, பேராவூரணி, கே.பரமத்தி ஆகிய இடங்களில் தென்னை நார் கயிறு குறுங் குழுமங்கள் அரசு அமைத்துள்ளது.

இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள MSME நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தென்னை நார் உலர்த்தும் கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்களுக்கு முதலீட்டு மானிய திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் இந்த அரசுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் துணை புரிந்து, தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டு, துறை அலுவலர்கள் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.