டேராடூன்:உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பிதோராகார்க் மாவட்டத்தில் சாலை சேதமடைந்ததால், ஆன்மிக சுற்றுலா வந்த 300 பேர், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய கோவில்களுக்கு ஏராளமானோர் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உத்தரகண்ட் மாநிலம் முழுதும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பிதோராகார்க் மாவட்டத்தில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
இதில், மலைப் பிரதேசத்தில் உள்ள தார்சுலா மற்றும் குன்ஹி இடையேயான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. சகதி மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால், லகான்பூர் என்ற இடத்தில், சாலை சேதம் அடைந்தது. பலத்த வெள்ளத்தில், 100 மீட்டர் துாரத்துக்கு சாலை அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் ஆன்மிக சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 பேர், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை.
சேதம் அடைந்த சாலையை சீரமைத்து, மீண்டும் போக்குவரத்தை துவங்குவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதுவரை பயணியர் பாதுகாப்பாக இருக்கும்படியும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement