சான் பிரான்சிஸ்கோ: அவதூறு வழக்கில், அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்ட முதல் நபர் நான் தான், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது: 2004 ல் அரசியலில் சேர்ந்த போது, நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என நான் யூகிக்க முடியவில்லை.
அவதூறு வழக்கில் கிரிமினல் தண்டனை பெற்ற முதல் நபராக நானாக தான் இருப்பேன். பார்லிமென்டில் இருந்து தகுதி நீக்கம் என்ற அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான். இது போன்ற நடவடிக்கைகள் சாத்தியம் என நான் நினைத்தது இல்லை. ஆனால், இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்துள்ளது என்று நினைக்கிறேன். ஒரு வேலை பார்லிமென்டில் இருக்கக்கூடிய வாய்ப்பை விட மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போன் ஒட்டுக்கேட்பு
சிலிகான் வேலியின் ‛ஸ்டார்ட் அப் ‘ தொழில் முனைவோர்களுடன் ராகுல் அதிக நேரம் செலவிட்டார். ப்ளக் அண்ட் ப்ளே அரங்கில் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் குழு விவாதத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் முக்கிய உதவியாளர்களுடன் ராகுல் கலந்து கொண்டார்.
அப்போது ராகுல் பேசுகையில், ‛ இந்தியாவில் நீங்கள் ஒரு தொழில்நுட்பத்தை பரப்ப விரும்பினால் ஒப்பீட்டளவில் அதிகாரம் பரவலாக்கப்பட ஒரு அமைப்பை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தரவுகளைப் பொறுத்தவரை இந்தியா போன்ற நாடுகள் அதன் உண்மையான திறனை அறிந்திருக்கின்றன. அங்கு தரவுகளின் பாதுகாப்பு குறித்த முறையான ஒழுங்குமுறைகளின் தேவை இருக்கிறது. என்றாலும் பெகாசஸ் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து நான் கவலை கொள்ளவில்லை. எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றுநான் கருதுகிறேன். ஒரு தேசத்திற்கான தனிநபர்களுக்கான தனியுரிமை தகவல் குறித்த கொள்கைகளை நீங்கள் நிறுவ வேண்டும்.(அப்போது விளையாட்டாக தனது ஐபோனை எடுத்து, ‛ஹலோ மிஸ்டர் மோடி…’ என்றார்.) ஒரு நாட்டின் அரசு, உங்களுடைய போனை ஒட்டுக்கேட்க விரும்பினால் யாரும் உங்களை தடுக்க முடியாது. இது என்னுடைய எண்ணம். ஒரு நாடு உங்கள் போனை ஒட்டுக் கேட்க விரும்பும் போது, அது சண்டையிடுவதற்கான சரியான களம் இல்லை. நான் என்ன வேலைகள் எல்லாம் செய்கிறேன் என்று தெரிந்து கொள்ள அரசு விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement