மங்களூரு, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கு தொடர்பாக, தட்சிண கன்னடா மாவட்டத்தில், 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
பீஹாரில், 2022 ஜூலை 12ல் நடந்த சாலை பேரணியில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த, சிலர் சதித் திட்டம் தீட்டினர்.
இது பற்றி முன்கூட்டியே தகவல் வெளியானதால், பீஹார் போலீசார் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில், கர்நாடகாவின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், தட்சிண கன்னடாவின் பன்ட்வாலைச் சேர்ந்த முகமது சினோன், சர்ப்ராஸ் நவாஸ், இக்பால், அப்துல் ரபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பன்ட்வால், பெல்தங்கடி, உப்பினங்கடி, புத்துார், உருவா உள்ளிட்ட பகுதிகளில், 16 இடங்களில் நேற்று காலை 5:00 மணி முதல், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பில் உள்ளவர்களின் வீடு, அலுவலகங்களிலும், ஒரு மருத்துவமனையிலும் சோதனை நடந்தது.
வெடி பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்த வழக்கில், தலைமறைவான தினேஷ் கோபே என்பவரை, கடந்த 21ல், புதுடில்லியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையின்படி, ஜார்க்கண்டில் உள்ள ஜாரியாடோலி, கும்லா மாவட்டத்தின் கம்தாரா பகுதியில் உள்ள கிஸ்னி கிராமத்தில், அம்மாநில போலீசார் உதவியுடன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தினர். இதில், 62 கிலோ ஜெலட்டின், ஆயுதங்கள் உட்பட ஏராளமான வெடி பொருட்கள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீஹாரிலும் ‘ரெய்டு’
புல்வாரி ஷெரீப் பயங்கரவாத வழக்கில், தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும், பீஹார் மாநிலம் கதிஹாரைச் சேர்ந்த மஹ்பூப் ஆலம் என்பவரின் வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்