மாரிசெல்வராஜின் அடுத்தப்படமான ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் திரைக்காணக் காத்திருக்கிறது. இப்படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரைப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மாரிசெல்வராஜ், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, ஏஆர் ரஹ்மான், வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இவ்விழாவில் பேசிய இயக்குநர் ரஞ்சித், மாமன்னன் திரைப்படம் குறித்தும் மாரி செல்வராஜ் குறித்தும் பேசியுள்ளார்.
பா. ரஞ்சித், ” மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடையை அளித்த உதயநிதி ஸ்டாலினிற்கு நன்றி. பரியேறும் பெருமாள் திரைப்படம் பண்ணும் போது எனக்கு பயம் இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. மாரி செல்வராஜின் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணினேன். அம்பேத்கர் படத்தை காட்டினால் மதுரை பற்றி எரியும் என்று கூறினார்கள். ஆனால், மக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டனர். எங்களின் விருப்பம் சரியாக நிறைவேறியது. பரியேறும் பெருமாளின் வெற்றி தான் இவ்வளவு பெரிய வாய்ப்பை மாரி செல்வராஜிற்கு கொடுத்திருக்கிறது. நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். மாமன்னன் திரைப்படத்தின் சில காட்சிகளை என்னிடம் காட்டினார். மிகவும் சீரியஸாக இருக்கிறது, கொஞ்சம் காமெடியாக எடுத்து செல்லலாமே என்று கூறினேன். இத்திரைப்படத்தில் மிகமுக்கியமான அரசியலை மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.”