சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.
ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து அனைத்துப் பாடல்களும் தற்போது வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன.
மாமன்னன் பாடல்கள் வெளியானது : கோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. உதயநிதி நடித்துள்ள கடைசிப் படமாக உருவாகியுள்ளதால் மாமன்னன் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாமன்னன் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானது. அதன்படி இந்தப் படத்தில் இருந்து 7 பாடல்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு பாடலையும் வெரைட்டியாக கொடுத்து ரசிகர்களுக்கு மியூசிக்கல் ட்ரீட் கொடுத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். ஏற்கனவே வடிவேலு பாடிய ராசக்கண்ணு, ஏஆர் ரஹ்மான் குரலில் ஜிகுஜிகு ரயில் பாடல்கள் வெளியாகிவிட்டன. இந்தப் பாடல்கள் தவிர ‘கொடி பறக்குற காலம்’, ‘நெஞ்சமே நெஞ்சமே’, ‘உச்சந்தல’, ‘மன்னா மாமன்னா’, ‘வீரனே’ ஆகிய பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இவைகளில் தெருக்குரல் அறிவு எழுதி அவரே பாடியுள்ள மன்னா மாமன்னா பாடலும், ஏஆர் ரஹ்மானின் மகன் ஏஆர் அமீன் பாடிய வீரனே பாடலும் அதிக கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல், விஜய் ஜேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய நெஞ்சமே நெஞ்சமே பாடல் மெலடியாக ரசிகர்களின் மனதை வருடியுள்ளது. ஆகமொத்தம் 7 பாடல்களுமே ரசிகர்களுக்கான இசை விருந்தாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாமன்னன் தான் உதயநிதியின் கடைசிப் படம் என்பதால், ஏராளமான திரை பிரபலங்கள் நேரு ஸ்டேடியத்தில் குவிந்துள்ளனர். ஆர்ஜே விஜய், டிடி இருவரும் தொகுத்து வழங்கும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். மேலும் உதயநிதியின் அம்மா துர்கா ஸ்டாலின், உதயநிதியின் மனைவி கிருத்திகா இருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதேபோல், தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாண்டிராஜ், ஏஆர் முருகதாஸ், பா ரஞ்சித், ஹெச் வினோத், விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், கவின், விஜய் ஆண்டனி, சூரி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் மாரி செல்வராஜ், உதயநிதி உட்பட படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.