சென்னை: Maamannan Audio Launch (மாமன்னன் ஆடியோ ரிலீஸ்) மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.
பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களில் ஒன்றாகவும் அந்தப் படத்தை ரசிகர்கள் கருதுகின்றனர்.
மாரியின் கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தியும், நேர்மையும் இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் சிலர் முன் வைத்தனர்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. மாரி செல்வராஜும் அதனை ஒவ்வொரு பேட்டியிலும் உறுதிப்படுத்திவருகிறார்.
கவனம் ஈர்த்த சிங்கிள்கள்: எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்ற பிம்பம் மாமன்னன் படத்தின் மூலம் உடைந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்ற மலையிலதான் தீ பிடிக்குது ராசா பாடலும், ஜிகு ஜிகு ரயில் பாடலும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மலையிலதான் பாடலை வடிவேலு அட்டகாசமாக பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.
மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜூன் 1ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா ஜூன் ஒன்றாம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது என அறிவித்திருந்தார்.
மும்முர ஏற்பாடு: இன்று மாலை 6 மணிக்கு ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவிருப்பதால் அதற்கான பணிகள் மும்முரமடைந்துள்ளன. ரஜினியும், கமல் ஹாசனும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் ஆடியோ வெளியீட்டு விழாவை முன்னிட்டு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் கார் ஒன்றில் உதயநிதி முன் இருக்கையிலும், வடிவேலு பின் இருக்கையிலும் அமர்ந்திருக்கின்றனர். இன்றைய ஆடியோ வெளியீட்டு விழாவில் வடிவேலு எப்படி பேசப்போகிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.