Maamannan Audio Launch – மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் கலந்துகொள்வது கன்ஃபார்ம்

சென்னை: Maamannan Audio Launch (மாமன்னன் இசை வெளியீட்டு விழா) இன்று மாலை நடைபெறவிருக்கும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் கலந்துகொள்வது உறுதியாகியிருக்கிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் இப்போது மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். முதல் படம் அதிரிபுதிரி ஹிட்டாக மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் ஒருதரப்பினரிடம் கடும் விமர்சனத்தை சந்தித்தது. மேலும் உண்மையில் நடந்த சில நிகழ்வுகள் படத்தில் தவறான காலகட்டத்தில் காட்டப்பட்டிருப்பதாக பலர் கூறினர். அதன் பிறகு அந்தத் தவறும் சரி செய்யப்பட்டது.

உதயநிதி, மாரி: கர்ணன் படத்தை இயக்கி முடித்த பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் உதயநிதி ஸ்டாலினோடு கூட்டணி அமைத்தார் மாரி செல்வராஜ். பெரும் சர்ப்ரைஸாக படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்ற அறிவிப்பும் வெளியானது. மேலும் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். முதல் இரண்டு படங்களையும் நல்லபடியாக இயக்கி சமூகத்தில் விவாதத்தை கிளப்பிய மாரி செல்வராஜ் மாமன்னனில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

காட்டு பசியில் வடிவேலு: படத்துக்கான எதிர்பார்ப்புக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் படத்தில் வடிவேலு நடிப்பது. சில பிரச்னைகளால் பல வருடங்கள் ஓய்வில் இருந்த வடிவேலுவுக்கு இந்தப் படம் தரமான கம்பேக்காக அமையும் என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி வழக்கமான வடிவேலுவை இந்தப் படத்தில் பார்க்க முடியாது என மாரி செல்வராஜும் கூறியிருப்பதால் வடிவேலுவின் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கதைக்களம் என்ன?: மாமன்னன் படம் மேற்கு மாவட்ட அரசியலை பேசுகிறது என மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதனையடுத்து மேற்கு மாவட்ட அரசியல் என்றால் நிச்சயம் சேலத்தை தொட்டிருப்பார்கள். சேலம்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊர். எனவே படத்தில் அவரை மறைமுகமாக தாக்குவார்களோ என ரசிகர்கள் தங்களது யூகங்களை கேள்விகளாக சமூக வலைதளங்களில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஆடியோ வெளியீட்டு விழா: இந்நிலையில் மாமன்னன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகள் பலமாக நடந்துவருகின்றன. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பணிகள் தொடர்பான வீடியோவையும் இன்று ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. மேலும் இவ்விழாவுக்கு ரஜினி, கமல் வருவார்கள் என தகவல் வெளியானது.

கமல் கன்ஃபார்ம்: உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் இது என்பதால் இருவருமே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் வருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் கமல் ஹாசன் இந்த விழாவில் கலந்துகொள்வது உறுதியாகியிருக்கிறது. அதனை உதயநிதி ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.