சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது அவரது 21வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
முன்னதாக அவர் நடித்துள்ள மாவீரன் ஜூலை 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அயலான் படம் தீபாவளி தினத்தில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாவீரன் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவீரன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்: கோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. முன்னதாக இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் மாவீரன் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே ஃபர்ஸ் சிங்கிள் வெளியான நிலையில், விரைவில் டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மாவீரன் சொன்னபடி வெளியாவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான காரணங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
முன்னணி ஹீரோவாக வலம் வரத் தொடங்கியதுமே சொந்தமாக படங்கள் தயாரிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதில் சில படங்கள் தோல்வியடைந்ததால் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் ஏற்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்த கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். டாக்டரைத் தொடர்ந்து டான் படம் ஹிட்டானாலும் பிரின்ஸ் மரண அடி வாங்கியது.
இதனால், மீண்டும் கடன் பிரச்சினை காரணமாக சிவகார்த்திகேயன் நெருக்கடியில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பைனான்சியர்களுக்கு இன்னும் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், பணத்தை கொடுத்தால் தான் மாவீரன் படத்தை வெளியிட முடியும் என பைனான்சியர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக மாவீரன் படம் சொன்னபடி வெளியாகுமா இல்லையா என்பது படக்குழுவினருக்கே சந்தேகமாக உள்ளதாம். மாவீரனைத் தொடர்ந்து அயலான் படமும் வெளியாகவுள்ளதால் விரைவில் கடன் பிரச்சினைகளுக்கு சிவகார்த்திகேயன் தீர்வு காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.