Mekedatu : `வெடிக்கும்' மேக்கேதாட்டூ விவகாரம்; திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நேருமா?!

மெக்கே மேக்கேதாட்டூவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு கர்நாடகம் நீண்டகாலமாக முயன்று வருகிறது. கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றன. தற்போது அங்கு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடனே, இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சித்தராமையா

‘மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடியை ஒதுக்குவோம்’ என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது, நீர்வளத்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், முதன் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேக்கேதாட்டூ அணைத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், `நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மேக்கேதாட்டூ அணை, மகதாயி அணை ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த விரைவில் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து அனுமதி பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்’ என்றும் அவர் கூறினார். மேக்கேதாட்டூ அணை கட்டுவது தங்களின் உரிமை என்றும், குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

டி.கே.சிவக்குமார்

மேக்கேதாட்டூவில் அணை கட்டுவோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியிருப்பதற்கு, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளைச் செய்வார் என்று நினைத்தோம். ஆனால், அண்டை மாநிலங்களுடன் நட்புறவைப் பேணுவதாகத் தெரியவில்லை. மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம்” என்று துரைமுருகன் கூறியிருக்கிறார். இதனால், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதற்கு முன்பு கர்நாடகாவில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றபோதும், பிறகு, பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றபோதும், மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் பா.ஜ.க அரசு முனைப்புக் காட்டியது. அதற்கு தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைகூட, தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ஆனால், தி.மு.க-வும் காங்கிரஸும் ஒரே கூட்டணியில் இருப்பதுடன், நெருக்கமான உறவையும் பேணி வருகின்றன. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி பதவியேற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

கர்நாடகாவில் பதவியேற்பு விழா

ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆட்சிகள் கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் நடைபெற்றுவரும் நிலையில், இரு மாநிலங்கள் தொடர்பான முக்கியப் பிரச்னைகளை நிதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் அணுக வேண்டியது அவசியம். ஆனால், ஆட்சிக்கு வந்த ஓரிரு நாள்களிலேயே சிக்கலான பிரச்னைக்கு காங்கிரஸ் அரசு முன்னுரிமை கொடுப்பது தி.மு.க அரசுக்கு நிச்சயம் சங்கடத்தைக் கொடுக்கும். டி.கே.சிவக்குமாருக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்தபோதிலும், ‘முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமையை அவர் விட்டுத்தருகிறார்’ என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

“டி.கே.சிவக்குமார், மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். ஆனால், இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் வாய்திறக்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா மாநிலங்கள் செயல்பட்டாலும், அதை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கவில்லை. அவர் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து வருகிறார். மேக்கேதாட்டூ அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்” என்றும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

அண்ணாமலை

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், “மேக்கேதாட்டூ விவகாரத்தை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று விமர்சித்திருக்கிறார்.

2021-ல் தி.மு.க அரசு அமைந்த பிறகு, அன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ‘மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டாம்’ என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு பதில் கடிதம் எழுதிய ஸ்டாலின், ‘மேக்கேதாட்டூவில் அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால், மேக்கேதாட்டூ அணை திட்டத்தைத் தொடரக் கூடாது. இந்த அணையால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், மேக்கேதாட்டூ அணை, மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியிருக்கும் புதிய அணை ஆகியவை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். அன்றைக்கு பா.ஜ.க அரசின் முயற்சிக்கு எதிராக கடும் எதிர்ப்பை ஸ்டாலின் அரசு தெரிவித்தது. ஆனால், இன்றைக்குக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் ஆட்சி கர்நாடகாவில் அமைந்திருக்கும் நிலையில், மேக்கேதாட்டூ விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை தி.மு.க எடுக்குமா என்பது தெரியவில்லை.

ஆனால், மேக்கேதாட்டூவில் அணை கட்டியே தீருவது என்ற தீவிரமான முயற்சியை டி.கே.சிவக்குமார் மேற்கொள்வார் என்றே தெரிகிறது. அப்படியான சூழலில், தி.மு.க., காங்கிரஸ் உறவில் சங்கடம் ஏற்படக்கூடிய நிலை உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, டி.கே.சிவக்குமாரின் பேச்சில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

“தமிழ்நாடுமீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. தமிழ்நாட்டுக்கு எதிராக நாங்கள் சண்டையிடவும் இல்லை. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் எங்கள் சகோதரர்கள். அதுபோல, இங்கே வசிப்பவர்கள் அவர்களின் சகோதரர்கள். எனவே, வெறுப்புக்கோ, பொறாமைக்கோ வாய்ப்பு இல்லை. இது எங்களுடைய திட்டம். இது, அவர்களுக்கும் பலனளிக்கும். காவிரி படுகையில் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் நாம் உதவ வேண்டும்” என இன்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

டி.கே.சிவக்குமார்

மேலும், “கர்நாடகா எவ்வளவு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்பது தொடர்பான உத்தரவுகள் இருக்கின்றன. நாங்கள் தண்ணீரைத் தேக்கிவைத்து, அதை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக விநியோகிக்கப்போகிறோம். இதற்கு காவிரி தீர்ப்பாயத்தின் அனுமதி இருக்கிறது. எனவே, இது குறித்து பீதியடையத் தேவையில்லை. உங்களுக்கு (தமிழ்நாடு அரசு) நாங்கள் பிரச்னை கொடுக்க மாட்டோம். தாராள மனதுடன் இருங்கள். நாங்களும் தாராள மனதுடன் இருக்கிறோம். நாம் இருவரும் அண்டை மாநிலங்கள். நாம் சண்டையிட்டது போதும். அது ஒருபோதும் உதவுவதில்லை. நாம் நல்லிணக்கத்துடன் இருப்போம். அது குடிநீர் வழங்கவும், உங்கள் விவசாயிகளுக்கு நன்மை பெறவும் உதவியாக இருக்கும்” என்றும் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.