பெங்களூரு: மேகேதாட்டு அணை விவகாரத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழக மக்கள் சகோதர, சகோதரிகள்போல் அணுக வேண்டும் என்று கர்நாடாக நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் அழைப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார். மேகேதாட்டு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிரான கர்நாடக அமைச்சரின் கருத்து தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்கள் அவர் அணை விவகாரத்தில் உறுதியாக இருப்பதைக் காட்டுவதாக உள்ளது. அந்த ட்வீட்களில் அவர், “மேகேதாட்டு அணைக்காக இதுவரை 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதைக் கொண்டு அத்திட்டத்திற்காக இதுவரை செலவு ஏதும் செய்யப்படவில்லை. அணைக்கான நிதி ஒதுக்கீடு அதற்காகவே செலவு செய்யப்பட வேண்டும்.
தமிழக சகோதரர்கள் மீது வெறுப்போ, கோபமோ இல்லை. அவர்கள் எங்களின் சகோதர, சகோதரிகளைப் போன்றோர். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை அருந்துகின்றனர். இவ்விவகாரத்தில் நாம் நீதிமன்றங்களுக்கு அலைந்தது போதும். மேகேதாட்டு விவகாரத்தில் நாம் உடன்பட வேண்டும். மேகேதாட்டு அணை நம் இரு மாநிலங்களுக்குமே நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு பாசன நீரும், சாமான்ய மக்களுக்கு குடி தண்ணீரும் காவிரியில் இருந்து கிடைக்கும்.
நான் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் இருவரும் அன்பான இதயம் கொண்டவர்கள். நம் இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் வாழட்டும். ஒருவொருக்கொருவர் உதவி செய்து முன்னேறுவோம்” என்று கூறியுள்ளார்.