MS Dhoni Surgery: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு முழங்காலில் இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை தரப்பில் இருந்தும், சிஎஸ்கே அணி தரப்பில் இருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாகவும், அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இன்னும் நாள்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் சிஇஓ-வான காசி விஸ்வநாதன் இன்று காலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோனியுடன் தான் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காசி விஸ்வநாதன் ஊடகம் ஒன்றில் கூறியதாவது,”ஆபரேஷனுக்குப் பிறகு நான் அவரிடம் (தோனி) பேசினேன். அறுவை சிகிச்சை என்னவென்று என்னால் விளக்க முடியாது, முழங்கால் பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்கள் உரையாடலின் போது, அவர் நன்றாக பேசினார்” என்றார்.
இதேபோன்ற பிரச்சனைக்காக நட்சத்திர வீரர் ரிஷப் பந்திற்கு, இதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்த விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் டின்ஷா பார்திவாலா, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு (41) அறுவை சிகிச்சை செய்தார் என தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனையில் தோனியின் மனைவி சாக்ஷி அவருக்கு துணையாக அங்குள்ளார். தோனி நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தோனியின் சிகிச்சையை மேற்பார்வையிட அதன் அணியின் மருத்துவரான மது தொட்டப்பிலை சிஎஸ்கே அணி நிர்வாகம் மும்பைக்கு அனுப்பியுள்ளது. அவர் முழுமையாக குணமடைவதற்கான எவ்வளவு காலம் எடுக்கும் இன்னும் தெரியவில்லை என தெரிகிறது. ஆனால் தோனி இன்னும் இரண்டு மாதங்களில் எழுந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MS Dhoni’s knee surgery is successful. [Cricbuzz] pic.twitter.com/jq0e01hVDM
— Johns. (@CricCrazyJohns) June 1, 2023
கடந்த திங்கட்கிழமை இரவு 5ஆவது முறையாக ஐபிஎல் தொடரை வென்ற பிறகு, தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கேயின் கடைசி லீக் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற சிஎஸ்கே அணியின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், தோனி முழங்காலில் ஐஸ் கட்டியுடன் மைதானத்தை சுற்றிவந்ததை காண முடிந்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தோனியுடன் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த படத்திலும் தோனி அதே பனிக்கட்டியை காயம்பட்ட முழங்காலில் அணிந்திருப்பதை காண முடிந்தது. மேலும், அவர் முழுங்கால் காயத்தால் அவதிப்படுவதை சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபிளமிங் உறுதிப்படுத்தியது நினைவுக்கூரத்தக்கது.