இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் மாதங்களில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., சபை எச்சரித்துள்ளது.
கொரோனா பரவல், ரஷ்யா – உக்ரைன் போர் போன்றவை உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அன்னிய செலாவணி குறைந்ததை அடுத்து, நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக, பாக்., கில் உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவைக்கு ஏற்கனவே கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதோடு, இங்கு கடந்த ஆண்டு புயல், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, விளைபொருட்களின் உற்பத்தி குறைந்துஉள்ளது.
இதனாலும் நாட்டில் பொருளாதார நெருக்கடியும், உணவு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாக்.,கில் அடுத்து வரும் மாதங்களில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தயாரித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
உலகளாவிய பொருளாதார மந்த நிலை, பாக்.,கின் பொருளாதார நெருக்கடியை அதிகரித்து உள்ளது.
இது, அடுத்த ஆறு மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அன்னிய கையிருப்பு பற்றாக்குறை, குறைந்து வரும் ரூபாய் மதிப்பு ஆகியவை, நாட்டின் உணவு மற்றும் எரிசக்தி வினியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனைக் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்