சென்னை: நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். சாமானியன் எனும் படத்தில் நடித்துள்ள ராமராஜன் அந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த படத்தில் கமிட் ஆகி உள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
மீனாட்சி குங்குமம் படத்தில் சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்த ராமராஜன் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
1986ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராமராஜன் அதன் பின்னர் ஏகப்பட்ட வெள்ளி விழா படங்களை கொடுத்து ரசிகர்கள் மனங்களில் இன்றும் கரகாட்டக்காரனாக நிலைத்து நிற்கிறார்.
ராமராஜன் ராஜ்ஜியம்: உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு எம்ஜிஆர் கணக்கா மேக்கப் எல்லாம் போட்டு தமிழ் சினிமாவில் கிராமத்துப் படங்களிலேயே கலக்கலாக நடித்து பல பெண் ரசிகைகளை கவர்ந்தவர் நடிகர் ராமராஜன்.
மாங்குயிலே பூங்குயிலே என அவர் பாட ஆரம்பித்ததும் படங்கள் சூப்பர் ஹிட் அடிக்க ஆரம்பித்தன. அவர் செண்பகமே என பாடியதும் பசுக்கள் தானாக பால் கறக்க ஆரம்பித்தன. அந்த அளவுக்கு ராமராஜன் ராஜ்ஜியத்தையே 80 மற்றும் 90களில் நிகழ்த்தி இருந்தார்.

மீண்டும் ஹீரோவான ராமராஜன்: நடித்தால் கடைசி வரைக்கும் ஹீரோதான் என 62 வயதில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறாரா ராமராஜன். 2001ம் ஆண்டு அவர் நடித்த சீறி வரும் காளை படமே சிறப்பாக அமையவில்லை. அதன் பின்னர் 2012ம் ஆண்டு மேதை படத்தில் நடித்தார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு 10 வருட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் எனும் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராஹேஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வரும் சாமானியன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த படம் உத்தமன்: இந்த படத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே நூலகத்தில் மைம் கோபியை போட்டுத் தள்ளும் காட்சிகள் டீசரில் இடம்பெற்று இருந்தன.
சாமானியன் படம் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரும் நிலையில், அதிரடியாக அடுத்த படத்திலும் கமிட் ஆகி விட்டாராம் ராமராஜன். அந்த படத்திற்கு உத்தமன் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகையிடம் உத்தமன் படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

மீனாவிடம் பேச்சுவார்த்தை: மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இப்பவும் ஜோடியாக நடித்து வரும் நடிகை மீனாவிடம் தான் உத்தமன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் என்பவர் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் இந்த படத்திற்கும் இளையராஜா தான் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.