நம்மில் பலரும் வீட்டில் ஃபிரிட்ஜுக்குள் பால், காய்கறி, பழம், உணவு என எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருள்களை வைத்துவிடவே நினைப்போம்.
ஃபிரிட்ஜுக்குள் எந்தப் பொருள்களை வைக்கலாம், எவற்றை வைக்கக் கூடாது, எவ்வளவு நாள் வைக்கலாம் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடேற்றிச் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. மீண்டும் சூடேற்றப்படும்போது சில உணவுகள் சத்துகளை இழப்பதுடன், நேரங்களில் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம்.
பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, தேன் உள்ளிட்ட பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.
முட்டை, தர்பூசணி, தக்காளியையும்கூட ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது பெரும்பாலானோர் அறியாத விஷயம்.
முட்டைகளை ஃபிரிட்ஜில் வைப்பதைவிட, அறை வெப்பநிலையில் வைப்பதுதான் சிறந்தது. முட்டை குளிர்ச்சியான இடங்களில் வைக்க உகந்த பொருள் அல்ல.
முட்டையை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து அறையின் வெப்பநிலையில் வைக்கும்போது, முட்டையில் சில மாற்றங்கள் நடக்கும்.
ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த முட்டையின் மேல், சில வாயுக்கள் ஈரமாகப் படரும். அதிகமாகப் படர்ந்த ஈரத்தால் பாக்டீரியாக்கள் முட்டை ஓட்டின் சிறு துளைகள் வழியே உள்ளே செல்லும்.
முட்டையின் உள்ளே சென்ற பாக்டீரியாக்களால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் வாய்ப்பு உண்டாகும். எனவே முட்டையை தேவைக்கேற்ப வாங்கி, உடனே சமைத்து விடுவது நல்லது. முட்டையை அறை வெப்பநிலையிலேயே வைக்கவும்.
தர்பூசணியை வெட்டிய உடன் சாப்பிட்டுவிடுவதே நல்லது. சிலர், வெட்டிய பழத்தின் மீந்த பகுதியை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அது நல்லதல்ல.
வெட்டிய தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்தால், அப்படியே சுருங்கி, அதில் உள்ள சத்துகள் போய்விடும்.
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாள்கள் பாதுகாக்க நினைக்க வேண்டாம். அதன் சுவை முற்றிலும் மாறி, ருசியற்றதாக்கி விடும். அதை காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பாதுகாத்துப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோல், ஊறுகாயை நாம் ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை.