டெல்லி: ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கிடையே இது விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் இப்போது மிக மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது. 12841 எண் கொண்ட கோரமண்டல் ரயில் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அடுத்துள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும்.
இத ஒடிசா, ஆந்திரா வழியாக இரண்டாவது நாளில் சென்னை வந்தடையும். நேற்றைய தினம் மாலை 3.20 மணிக்கு கோரண்டல் எக்ஸ்பிரஸ் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது.
பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது. சுமார் 10+ ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. தடம் புரண்ட பெட்டிகள் எதிரே இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. சிறிது நேரம் கழித்து அங்கே வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலால் உரிய நேரத்தில் நிற்க முடியவில்லை. இதன் காரணமாக அந்த ரயிலும் இந்த பெட்டிகளில் மோதி தடம் புரண்டன.
இதனால் விபத்து மிகவும் கொடூரமானதாக மாறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை இப்படியொரு கொடூர ரயில் விபத்து நடந்ததே இல்லை என்ற நிலையே உருவாகியுள்ளது. இந்த இரண்டு ரயில்கள் மட்டுமின்றி, டிராகில் இருந்த மற்றொரு சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இப்படி கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் அங்கே மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும், விமானத்துறையும் மீட்புப் பணிகளில் களமிறங்கினர். இருப்பினும், இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், முடிந்தவரைத் துரிதமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை இந்த விபத்தில் 120 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 800க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து கோவா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மட்கான் நிலையத்தில் இருந்த அஸ்வினி வைஷ்ணவ் அங்கிருந்து உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தார்.
இதற்கிடையே இந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒடிசா வந்தடைந்த அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விபத்திற்கான மூல காரணத்தைக் கண்டறிவது முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.