வாஷிங்டன்: அடுத்து வரும் மூன்று, நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பாஜக அழிக்கப்படும் என்றும், பெரும்பான்மை மக்களின் ஆதரவில்லாத ஆளுங்கட்சியை வீழ்த்துவதற்கான அடிப்படை விஷயங்கள் அனைத்தும் காங்கிரஸிடம் இருக்கிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மூன்று நகரங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள பிரபல அமெரிக்க இந்தியரான ஃப்ரங்க் இஸ்லாம் வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தந்திரங்களை தோற்கடிக்க முடியாது என்று நம்பும் போக்கு மக்களிடம் உள்ளது. அது உண்மையில்லை. நான் இங்கே ஒரு சின்ன கணிப்பை கூறுகிறேன். அடுத்து வரும் மூன்று, நான்கு தேர்தல்களில் பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோதினால் அந்தக் கட்சி அழிவைச் சந்திக்கும்.
நான் இப்போது உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். நாங்கள் கர்நாடகாவில் செய்ததை மற்ற மாநிலங்களிலும் செய்வோம். ஆனால், இந்திய ஊடகங்களைக் கேட்டால், அப்படி எதுவும் நடக்காது என்று சொல்லும். இந்திய ஊடகங்கள் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன.
இந்தியாவில் 60 சதவீத மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை, நரேந்திர மோடிக்கு வாக்களிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். பாஜக வசம் பிரச்சாரக் கருவிகள் இருப்பதால் அவர்கள் அதிகாமாக சத்தமிடலாம். அதைச் செய்வதில் அவர்கள் வல்லவர்கள். ஆனால், பெரும்பான்மையான இந்திய மக்கள் அவர்களுடன் இல்லை.
ஜனநாயகத்தின கட்டமைப்பை மீண்டும் உருவாக்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அது மிகவும் கடினமானது. அதற்கு அதிக நேரம் எடுக்கும். ஆனால், பாஜகவை வீழ்த்துவதற்கான அடிப்படைகள் எங்களிடம் இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
மோடியை வீழ்த்த முடியாது என்று ஊடகங்கள் சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதில் பலவும் மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையில் அவர் மிகவும் பலமிழந்து இருக்கிறார். நாட்டில் பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினைகளால் இந்திய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
தகுதி நீங்க நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல், “ஜனநாயகம் இந்த அளவுக்கு தாக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இது ஜனநாயகத்தைத் தாக்கும் முறை. ஆனால் ஒருவகையில் எனக்கு நல்லது தான். ஏனென்றால் இதன்மூலம் நான் என்ன செய்யவேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்கு அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு, பாசம், ஆதரவுக்கு நன்றி. இந்த அமெரிக்க பயணத்தில், இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக போராட பலர் தயாராக இருப்பதைப் பார்க்க முடிகிறது” என்று அவர் தெரிவித்தார்.
வாசிக்க > ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்: ராகுல் காந்தி | 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக அமையும்: ராகுல் காந்தி