பெரம்பலூர் : அல்லிநகரம் பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த அபிநயா (23 வயது) என்ற இளம் பெண், அரியலூர் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 30 ஆம் தேதி, தனக்கு உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கு செல்கிறேன் என்று மளிகை கடையின் ஓனரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்ட அபிநயா வீட்டுக்கு செல்லவில்லை.
மறுநாள் காலை உடையார்பாளையம் நெடுஞ்சாலை ஓரமாக தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார் அபிநயா.
அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (33 வயது) என்ற இளைஞரும், அபிநயாவும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பார்த்திபனின் பெற்றோர் அவருக்கு வருகின்ற ஆறாம் தேதி வேறுறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த நிலையில், தனது திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக உடையார்பாளையம் வந்த பார்த்திபனை சந்தித்த அபிநயா, தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், இருவரும் ஜெயங்கொண்டம் நோக்கி திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது பார்த்திபன் அபிநயாவை கொலை செய்யும் நோக்கில், திட்டமிட்டு தடுப்பு சுவரில் இரு சக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதில், பார்த்திபனுக்கும் பின் தலையில் அடிபட்டுள்ளது. மேலும், அபிநயாவுக்கு தலை மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், சாலையின் நடுவே உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
தான் காதலித்த பெண், தந்தை இல்லாத பெண் என்ற சிறிது இரக்கம் இல்லா அந்த மிருக குணம் கொண்ட பார்த்திபன், உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிநயாவை, சாலை ஓரம் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுள்ளான்.
தனது திருமணத்திற்கு தடையாக இருந்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த பார்த்திபன், தான் தப்பித்து கொள்ள, விபத்து ஏற்பட்டதாவும், தான் மட்டும் தப்பித்து வந்ததாவும் முதல்கட்ட விசாரணையில் பொய் வாக்குமூலம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை போலீசார் பார்த்திபனை மீண்டும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அப்பாவி பெண் அபிநயாவை அடித்தே கொலை செய்து இருக்க கூட வாய்ப்புள்ளது. கொலையின் பின்னணியில் வேறு சிலரும் இருக்கலாம், அந்த கொடூரன் பார்த்திபனுக்கு மரண தண்டனை பெற்று தரவேண்டும் என்று, சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் #JusticeForAbhinaya என்ற ஹேஸ்டேக் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.