மும்பை கல்யாண் என்ற இடத்தில் வசிப்பவர் ஆகாஷ் முகர்ஜி. இவர் தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவரை கடந்த ஒர் ஆண்டாக காதலித்து வந்தார். இருவரும் நேற்று வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு, மும்பையை சுற்றிப்பார்க்க சென்றனர். அவர்கள் புறநகர் ரயில் மூலம் சி.எஸ்.டி சென்று கேட்வே ஆப் இந்தியாவை மாலை வரை சுற்றிப்பார்த்தனர்.
மாலையில் பாந்த்ரா கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரையில் உள்ள கல்லில் அமர்ந்து இரவு வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இரவு 10 மணி வரை கடற்கரையில் இருந்தனர். நேரமாகிவிட்டதால் வீட்டுக்கு போகலாம் என்று அவருடன் இருந்த காதலி தெரிவித்தார். ஆனால் மேலும் `சிறிது நேரம் இருக்கலாம்’ என்று ஆகாஷ் தெரிவித்தார். அதோடு டாக்சியில் வீட்டில் கொண்டு போய்விடுவதாக தெரிவித்தார்.
ஆனால் அப்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. அதோடு இரவு 10 மணியாகிவிட்டதால் அதனை பயன்படுத்தி ஆகாஷ் தன்னுடைய காதலியுடன் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தார். அதோடு அப்பெண்ணிடம் திருமண ஆசையும் காட்டினார். ஆனாலும் அப்பெண் கடற்கரையில் மகிழ்ச்சியாக இருக்க சம்மதிக்கவில்லை. அதோடு தன்னை வீட்டில் கொண்டு போய்விடும்படி கூறி அப்பெண் அழ ஆரம்பித்தார். இதனால் கோபத்தில் ஆகாஷ் அப்பெண்ணின் தலைமுடியை பிடித்து அங்கிருந்த பாறையில் முகத்தை மோதச்செய்தார். அதோடு கடல் தண்ணீரில் அப்பெண்ணின் தலையை மூழ்கடித்தார். அப்பெண் அவரை எதிர்த்து போராடினார்.
அதோடு உதவி கேட்டு கத்த ஆரம்பித்தார். கடற்கரையில் இருந்த சிலர் உடனே அப்பெண்ணிற்கு உதவிக்கு வந்தனர். அவர்களிடம் அப்பெண் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதாக ஆகாஷ் தெரிவித்தார். ஆனால் தன்னை காப்பாற்றும்படி அப்பெண் அங்கு நின்றவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அப்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது. உடனே அங்கு இருந்தவர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். அதோடு ஆகாஷ் முகர்ஜியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.