ஆக.15 முதல் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 திட்டம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக வாக்காளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா கூறியது: “க்ருஹ ஜோதி திட்டம் மூலம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1 முதல் தொடங்கு. ஆனால், ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகைகளை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும்.

க்ருஹ லக்‌ஷ்மி என்ற திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 மாதந்தோறும் வழங்குதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

அன்ன பாக்யா திட்டம் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11-ஆம் தேதி முதல் செயல்முறைக்கு வரும். ஆனால், கர்நாடகா மாநிலத்திற்குள் மட்டுமே பெண்கள் இச்சலுகையைப் பெற இயலும். மாநிலங்களுக்கு இடையேயான கர்நாடக அரசுப் பேருந்தில் இச்சலுகையைப் பெற இயலாது. அதேபோல் ஏசி மற்றும் சொகுசுப் பேருந்துகளிலும் இந்தச் சலுகை இல்லை. சாதாரண கட்டணம் உள்ள பேருந்துகளில் மட்டுமே இச்சலுகை பொருந்தும். பேருந்து இருக்கைகளில் 50 சதவீதம் ஆண்களுக்கென்று ரிசர்வ் செய்யப்படும். எஞ்சியுள்ள இருக்கைகளில் பெண்கள் சலுகையுடன் இலவசமாக பயணிக்கலாம்.

யுவாநிதி திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள், அதாவது 2022 – 2023 காலத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, பட்டயப் படிப்பு பயின்றவர்களுக்கு ரூ.1500 என்ற அளவிலும் நிதியுதவி வழங்கப்படும்” என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். மகளிருக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் அனுமதிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம், மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் ஆகிய 5 உத்தரவாத வாக்குறுதிகளை அறிவித்தது.

இதுகுறித்த விவரங்கள் அச்சடிக்கப்பட்ட உத்தரவாத அட்டை வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டன‌. அப்போது இந்த வாக்குறுதிகள் முதல்அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்க‌ப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 10 நாட்கள் ஆன‌ பின்னரும் 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் டிக்கெட் எடுக்க மறுப்பதால் நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா இலவச திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், மூத்த அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து தற்போது முதல்வர் சித்தராமையா ஐந்து வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.