மத்தியப் பிரதேச மாநிலம், பிலிபிட்டில் வசிப்பவர் ஃபர்ஹான். இவர் ஷபோ எனும் பெண்ணைக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆண் குழந்தைகள்மீது விருப்பம் அதிகம். அதனால் ஆண் குழந்தை வேண்டும் என மனைவியிடம் கேட்டிருக்கிறார். ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஷபோ மூன்றாவது முறையாகக் கர்ப்பமடைந்தார்.
இதற்கிடையே, அவர்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள்தான் என உறவினர்கள் கிண்டல் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி ஷபோ மூன்றாவதாகவும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனால் ஏமாற்றமடைந்த ஃபர்ஹான், கோபத்தில் குழந்தையைத் தாயின் கண்முன்னே தரையில் வீசியதாகக் கூறப்படுகிறது. அதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனது.
உடனே ஷபோ வீட்டார் காவல் நிலையத்தில் ஃபர்ஹான், அவர் குடும்பத்தார்மீது புகாரளித்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் கோபமடைந்த ஃபர்ஹான், அந்தக் குழந்தையைத் தரையில் வீசியிருக்கிறார். அதன் பிறகு குழந்தை இறந்திருக்கிறது. மருத்துவர்களிடம் விசாரித்ததில், குழந்தை பிறக்கும்போதே மிகவும் பலவீனமாக இருந்ததாகத் தெரிவித்தனர்.
ஃபர்ஹான் கீழே வீசியதால் குழந்தை இறக்கவில்லை. குழந்தை பிறக்கும்போதே அதன் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில்தான், ஃபர்ஹான் தரையில் வீசியதும், குழந்தை இறந்துவிட்டது. ஃபர்ஹான் மீது புகாரளித்த அவருடைய மனைவி, தன்னுடைய புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு, கணவருடன் சமாதானமாகிவிட்டார்” எனத் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும், “பச்சிளம் குழந்தையை இப்படி மனிதாபிமானமே இல்லாமல், கொடூரமான முறையில் தரையில் வீசிய அதன் தந்தைமீது நடவடிக்கை எடுக்காமல்விட்டது, கண்டனத்துக்குரியது. அந்த நபர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” பலர் வலியுறுத்தி வருகின்றனர்.