இன்று காலை எழுந்ததும் தலைப்பு செய்திகளில் ஒன்றாக வலம் வந்தது
, திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் என்பது தான். ஆனால் இதற்கான காரணங்களை ட்விட்டர் நிர்வாகம் முறைப்படி தெரிவிக்கவில்லை. வன்முறையை தூண்டும் வகையிலான கருத்தா? ஏதேனும் வழக்கா? ட்விட்டர் விதிமுறைகளில் மீறலா? அரசு எடுத்த நடவடிக்கையா? என எந்தவித தகவலும் கிடையாது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்று இவர்கள். நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எதிர்ப்பு குரல்
இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இல்லாமல் இத்தகைய முடக்கம் நடந்திருக்காது. சீமான், திருமுருகன் காந்தி போன்றோர் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை பொதுவெளியில் வைக்கக் கூடியவர்கள்.
ஒடுக்கப்படும் கருத்து சுதந்திரம்
அதேசமயம் எவ்வளவு ஆவேசம் இருந்தாலும் எல்லை மீறி போக மாட்டார்கள். தரம் தாழ்ந்து பேசியதாக தெரியவில்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்தால் அதை சுட்டிக் காட்டி தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். எதுவுமே சொல்லாமல் நடவடிக்கைகள் பாய்வதை ஏற்க முடியாது. உரிமைகள் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படையான ஒன்று. உதாரணமாக உயிர் வாழும் உரிமை, கருத்து சுதந்திரம் ஆகிய இரண்டை சொல்லலாம். இதை அரசே முன்வந்து வழங்குகிறது. இதுபற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 19 ஏ
அரசே நினைத்தாலும் நமது உரிமைகளை தடுக்க முடியாது. பறிக்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஷரத்து 19 ஏ சொல்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை தான். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் அப்படியான சுதந்திரத்தை முழுமையாக வழங்குகிறார்களா? என்றால் கேள்விக்குறி தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரம் தனது கோர முகத்தை மக்கள் மீது பல்வேறு விதங்களில் காட்டியுள்ளது.
ட்விட்டர் நடவடிக்கை
தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் சமூக வலைதளங்களில் கைவைத்து வருகின்றனர். சீமான், திருமுருகன் காந்தி விஷயத்தில் ட்விட்டர் நிறுவனம் தவறு செய்திருந்தால் மத்திய அரசு சுட்டிக் காட்டி கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டி இருக்க வேண்டாமா? அப்படி செய்யவில்லை. எனவே இதன் பின்னால் அரசியல் இருப்பதை மறுப்பதற்கில்லை. கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவது நாளைய வளமான எதிர்காலத்தின் மீது விழும் பலத்த அடியாக இருக்கும்.
ஒருமொத்த எதிர்க்குரல்
ஏனெனில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஆராய்ந்து சரியான முடிவுகளை, நடவடிக்கைகளை அரசு எடுப்பது அவசியம். இதுபோன்ற கருத்துரிமை சார்ந்த விஷயத்தில் அனைவரும் கைகோர்த்து நின்று ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். ஒன்றுபட்டு எழும் குரல் அதிகாரத்தின் அத்துமீறலை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்.