ஹம்பன்டோட்டா,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் இன்று (காலை 10 மணி) நடக்கிறது.
விரைவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் விளையாட உள்ள ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கு அதற்கு தயாராவதற்கு இந்த போட்டி உதவிகரமாக இருக்கும். மூத்த வீரர் திமுத் கருணாரத்னே அணிக்கு திரும்பியிருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக மிரட்டிய ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கப்படும் மதீஷா பதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆப்கானிஸ்தான் அணியில் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஹட்ரன், முகமது நபி, முஜீப் ரகுமான், நூர் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பிரதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் முதுகுவலியால் அவதிப்படுவதால் முதல் இரு ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் இலங்கையும், 2-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.