அரியலூர் அருகே சாலையோரம் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, காதலனே விபத்தை ஏற்படுத்தி கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லைப் பகுதியில், கடந்த 30ஆம் தேதி, சாலையோரத்தில் காது, மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், படுகாயங்களோடு கிடந்த இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த உடையார்பாளையம் போலீசார், சாலையோரம் சடலமாக கிடந்தவர், பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பதும், அவர், அரியலூரில் மளிகை கடை ஒன்றில் பணியாற்றி வந்ததையும் கண்டறிந்தனர்.
அரியலூரில் வேலை செய்தவர் எதற்காக, உடையார்பாளையம் பகுதிக்கு வந்தார்.? யாரோடு வந்தார்.? என, அவர் பணியாற்றிய மளிகைக் கடையில், சக தொழிலாளர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, கடைக்கு அடிக்கடி வந்து சென்ற தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை 2ஆண்டுகளாக அபிநயா காதலித்து வந்ததும், சம்பவத்தன்று அவரோடு பைக்கில் சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட பார்த்திபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 6ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததாக கூறியுள்ளார். இதை எப்படியோ அறிந்து கொண்ட அபிநயா, தன்னை ஏமாற்றிவிட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்வது நியாயமா.? எனக் கேட்டதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும், பார்த்திபன், போலீசில் தெரிவித்துள்ளார்.
கடந்த 30ஆம் தேதி இரவு, அபிநயாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, அதிவேகத்தில் சென்றதோடு, உடையார்பாளையம் அருகே, சாலை தடுப்புச் சுவரில் பைக்கை மோதவிட்டு விபத்தை ஏற்படுத்தியதாக பார்த்திபன் கூறியுள்ளார். படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய அபிநயாவை, சாலையோரம் தூக்கிப்போட்டுவிட்டு, தான் மட்டும், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுச் சென்றதாக, போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கி மரணத்தை ஏற்படுத்தி, காதலியின் உயிர்பறித்த குற்றத்திற்காக பார்த்திபன் கைது செய்த உடையார்பாளையம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
என்னதான் உருகி, உருகி காதலித்தவராக இருந்தாலும், காதலனோடு பிணக்கு ஏற்பட்டு விட்டால், ஒதுங்கி இருப்பதோடு, இரவு நேரங்களில், சந்திப்புகளை தவிர்த்தால், தேவையற்ற சர்ச்சைகள், துயரச் சம்பவங்களில் இருந்து தப்பிக்கலாம் என்பதே, அண்மைகால சம்பவங்கள், இளம்பெண்களுக்கு தொடர்ந்து உணர்த்தும் எச்சரிக்கைப் பாடமாகும்….