இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

இசைக்கு ராஜா, இசை கடவுள் என கொண்டாடப்படும் இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்ததினம் இன்று. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதள பக்கம் சென்றால் இளையராஜாவுக்கு வாழ்த்து மழையும், அவரது பாடல் தொடர்பான விஷயங்கள் தான் அதிகம் இன்று டிரெண்ட் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இளையராஜாவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இல்லத்திற்கே சென்று அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பொன்முடி ஆகியோரும் உடன் சென்றனர்.

இசை உலகுக்கே புரட்சி
முதல்வர் வெளியிட்ட வாழ்த்து பதிவு : காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா! அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி! அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து ரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் ரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! இளையராஜா. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.