சென்னை: “என் மகன், அமைதியாகத்தான் பேசுவான் . அப்படிப்பட்டவனை அழைத்துச் சென்று, இந்த விசயத்தில் யாரெல்லாம் துணை இருந்தார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அந்த தண்டனையை அர்த்தநாரீசுவரன் கொடுப்பார்” என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா கூறியுள்ளார்.
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கோகுல்ராஜின் தாய் சித்ரா, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கோல்ராஜின் தாய் சித்ரா கூறியது: “என் மகன் திருடவில்லை, கொலை செய்யவில்லை, எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை, ஒரு பாவமும் அறியாதவன். என் கணவர் இறந்த நிலையில், அவனுக்கு சின்ன வயதுதான். என் மகன்கள் இருவரையும் ஆங்கில வழியில்தான் படிக்கவைத்தேன். இருவரையும் ஆளாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று வளர்த்து வந்தேன்.
அமைதியாகத்தான் பேசுவான் என் மகன். அப்படிப்பட்டவனை அழைத்துச் சென்று, இந்த விஷயத்தில் யாரெல்லாம் துணை இருந்தார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அந்த தண்டனையை அர்த்தநாரீசுவரன் கொடுப்பார். ஒருபாவமும் செய்யாத எனது மகனை சித்ரவதைக்கு ஆளாக்கி, என் மகனின் தலையைத் துண்டித்துள்ளனர். என் மகன் அப்படி என்ன தப்பு செய்தான்? எவ்வளவோ கொடூரமான தவறு செய்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, எதுவும் அறியாத பச்சை மண்ணை ஆள்வைத்து கொன்றுள்ளனர். அப்படி என்ன அவன் மீது வெறி? அவன் என்ன தவறு செய்தான்?
நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வழக்கில், உதவிய விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினருக்கும், வழக்கில் போராடி இந்த தீர்ப்பு வாங்கித் தந்த வழக்கறிஞர்கள் மோகன், சங்கரசுப்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார். | வாசிக்க > சாதி ஆணவ படுகொலைகளுக்கான தண்டனையை உறுதி செய்யும் அற்புதமான தீர்ப்பு: கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்