கன்னியாகுமரியில் பரபரப்பு : வீடு புகுந்து எஸ்.பி அலுவலக ஊழியரைத் தாக்கிய கும்பல் – 3 பேர் கைது.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் இவர் வெளிநாட்டுக்கு மண்ணுளிப் பாம்பை கடத்திய வழக்கில் சிக்கி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த அரவிந்தை ஐந்து பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால், படுகாயமடைந்த அரவிந்த், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அரவிந்துக்கும் தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் படி போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 17 வயது சிறுவன் ஒருவர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.