கோவை: கோவையில் கல்யாணம் ஆன வெறும் 23 நாட்களில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணை காரணமாக குடும்பமே இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறது.
அவசர காதல் கல்யாணத்தில் தொடங்கி, கொலையில் முடிந்துள்ளது. 20 வயதாகும் இளம் ஜோடி காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்கள். அந்த காதலில் 23 நாட்கள் கூட கல்யாண வாழ்க்கையை தாண்டவில்லை.
பக்குவமற்ற மனநிலை, வாழ்க்கையை வாழத்தெரியாமல் வாழ்ந்து கடைசியில் அது கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் மகனின் கொலையை மறைக்க உதவி செய்த தாய், தந்தை இருவருமே சிறையில் இருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் மத்துவராயபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் 20 வயதாகும் சஞ்சய் என்ற இளைஞரும், கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 20 வயதாகும் ரமணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளார்கள். கடந்த மே 6-ம் தேதி பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணி சென்று கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர், மத்துவராயபுரத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் ரமணி உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தகவல் போயிருக்கிறது. இதையடுத்து காருண்யா நகர் போலீஸார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெண் வீட்டார் தரப்பில் புகார் கூறினார்கள். இதையடுத்து கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்த சூழலில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், கழுத்துப் பகுதி இறுக்கப்பட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரமணி உயிரிழந்தார் என்று வந்தது..
இதையடுத்து, சஞ்சய், அவரது தாய் பக்ருநிஷா, தந்தை லட்சுமணன் ஆகியோரிடம் டிஎஸ்பி ராஜபாண்டியன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை வெளியே வந்தது. இதையடுத்து ரமனியின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசாரிடம் பேசும் போது, “சஞ்சயும், ரமணியும் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தார்கள். இருவரும் காதலித்தபோதும், மற்றொரு மாணவியுடனும் சஞ்சய் செல்போனில் பேசி வந்திருக்கிறார். கல்யாணத்திற்கு பின்னரும் இது தொடர்ந்துள்ளது. இதையறிந்த ரமணி கணவரை கண்டித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த 29-ம் தேதி தம்பதி இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுஉள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் மனைவி ரமணியை தாக்கி, துப்பட்டாவை வைத்து கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சய், அவரது தந்தை லட்சுமணன், தாய் பக்ருநிஷா ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார். இதனை மூவரும் சேர்ந்துதற்கொலையாக மாற்றி சித்தரித்துள்ளனர். வீட்டிலிருந்த மஞ்சளை எடுத்து ரமணியின் சடலத்தை குளிப்பாட்டியுள்ளனர். மாற்றுத் துணியை அவருக்கு பொருத்தியுள்ளனர்.
சாணிப்பவுடரை (இது மிக மோசமானது எந்த காரணம் கொண்டும் யாரும் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம்) கரைத்து ரமணியின் வாயில் ஊற்றி இருக்கிறார்கள். திருமணமான 23 நாட்களில் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணையில் 3 பேரும் சிக்கி இருக்கிறார்கள்” இவ்வாறு போலீசார தெரிவித்தனர்.